Wednesday 25 February 2015

கல்யாண சாப்பாடு- இலை நிறைவதற்கா? வயிறு நிறைவதற்கா?

கல்யாணத்தின் உச்சகட்ட மகிழ்ச்சி விருந்து சாப்பாடுதான். அப்போதுதான் வயிறாற வாழ்த்தும் கிடைக்கும். கல்யாணத்திற்கு செல்வது என்பது ஒரு சமூக நிர்பந்தம். கல்யாணத்தில் சாப்பிடுவது என்பது அதே அளவு சமூக நிர்பந்தம் கொண்டது. சம்பந்தி வீட்டாரை திருப்திபடுத்தவேண்டிய இடம் பந்தியில் தான். சாப்பாட்டு பந்தியில் ஏற்படும் சிறுதகராறு கல்யாணம் நின்று போகக் காரணமான சம்பவங்களும் உள்ளது. ஆக கல்யாண சாப்பாடு நிறைவாக இருக்க பார்த்து பார்த்து செய்யவேண்டிய பொறுப்பு கல்யாணம் செய்பவருக்கு..

மற்ற விசயங்கள் போல இலையில் போடவேண்டிய அயிடங்களும் பட்டியலிடப்பட்டு முடிவுசெய்யப்படுகின்றன. கவுரவம் என்பது நாற்காலி போட்டு நாட்டாண்மை செய்யும் கல்யாண சடங்குகளில் சாப்பாடு தப்பமுடியுமா/?

சமீபத்தில் ஒரு கல்யாண விருந்தில் உணவு வீணாவதைப் பார்த்து ஏற்பட்ட வேதனையின் வெளிப்பாடே இந்த குறிப்பு. ஒரு இலையில் 40 அயிட்டங்கள் வைக்கப்பட்டன. ஒருவர் கூட இலையில் வைத்த அனைத்தையும் சாப்பிடவில்லை. சுமார் 1500 பேர் சாப்பிட்டிருக்கலாம். அதிகப்படியாக 15-20 அயிட்டங்களே சாப்பிட்டிருப்பார்கள்.
மீதி???
வேறெங்கு குப்பைக்குத்தான்.
ஒரு இலையின் மதிப்பு ரூபாய் 400 இருக்கும். ஒரு இலையில் வீணான உணவு 50 சதவீதம் என்று கணக்கிட்டாலும் சராசரியாக ரூபாய் 200 இருக்கும். 1500 பேருக்கு எனக்கணக்கிடும் போது மொத்தம் ரூபாய் 300000 உணவு அன்று வீணடிக்கப்பட்டு குப்பைக்கு சென்றுள்ளது. இதைவிட பிரமாண்டமான திருமணங்கள் நகரங்களில் நடந்து கொண்டுதான் உள்ளன. 1000 மண்டபங்களில் எனக் கணக்கிட்டாலும் ஒரு நாளுக்கு சுமார் ரூபாய் 3000 இலட்சம் உணவு வீணாகுமல்லவா? ஒருவருடத்தில் ஒரு மண்டபத்தில் 50 கல்யாணம் எனக் கொண்டால்கூட சுமார் ரூபாய் 1500 கோடி உணவு வீணாகிறது.நம் கணக்கில் உள்ள துள்ளியமின்மைக்கிற்கு குறைத்து மதிப்பிட்டாலும் ரூபாய் 1000 கோடிக்கு குறையாமல் வீணாகிறது என்பது தெளிவாகிறது.
நாம் முன் வைக்கும் கேள்விகள் -----
  • ரூபாய் 1000 கோடி வீண் தவிர்க்க முடியாதா?
  • இதனை உற்பத்தி செய்த விவசாயிக்கு நியாயம் வழங்குகிறோமா?
  • தேவைக்கு அதிகமான உணவு அயிட்டம் தேவைதானா?
  • உணவை வீண் செய்வதற்கு யார் பொறுப்பு?
  • உணவு , இலை நிறைவதற்கா/? வயிறு நிறைவதற்கா?
தனது தேவைக்கு ஏற்ப உணவு அயிட்டம் தேர்வு செய்து கொள்ளும் வகையில் உணவு பரிமாறும் முறையில் மாற்றம் செய்தால் வீண் குறைக்க முடியுமா?
உங்கள் ஆலோசனைகளை – ஏன் கேள்விகளையும் இணையுங்களேன். மாற்றைத்தேடுவோம்.

1 comment:

  1. Kavurava kirukkarkalin kannamoochi attam. Matramudinthal nalathu.
    Eswaran, salem

    ReplyDelete