Wednesday, 25 February 2015

அறிவுத் தோட்டம் -- இது ஒரு விவசாயினுடைய கதை

இயற்கை வேளாண்மை மீது அவருக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது. தானே அதனை நிரூபிக்க வேண்டும் என் வேட்கை கொண்டார். நகரத்தில் இருந்த தன் வீட்டை விற்று 2.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.
ஊரெல்லாம் ஒரே கேள்விதான். இவருக்கு என்ன பைத்தியமா?
எல்லோரும் நிலத்தை விற்று வீடுவாங்கி முதலீடாக மாற்றும் போது இவர் எதிர் திசை பயணம் செய்கின்றார் என்பது தான். ஆனாலும் அவர் முயற்சியை தொடர்ந்தார்.
10 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் வரண்டுபோன அந்த பூமிக்கு தண்ணீருக்கு வழிவகுத்தார் .நிலத்தை உயிராக காக்கும் ஒரு உன்னத குடும்பம் அவருக்கு உறுதுணையாக நின்றது .இரசாயன உரம்,பூச்சி கொல்லி நிலத்து பக்கம் வராமல் பார்த்து கொண்டார். இயற்கை உரமாக மாட்டுச்சாணம்,மண்புழு உரம்,கடற்பாசி உரம் ,பஞ்சகாவியம் என் நிலத்தை திணரடித்தார். நிலத்திற்கு உயிர் திரும்பியது.வண்ணத்துப் பூச்சிகள் வலம் வரத்தொடங்கின. நிலம் தன் மகிழ்ச்சியை பச்சை கம்பளம் விரித்து வரவேற்றது. மூன்று ஆண்டுகள் காத்திருந்த விவசாயி இப்போது நம்பிக்கையோடு இருக்கிறார். அந்த மகிழ்ச்சியைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஆம் அந்த விவசாயி நானேதான்.
மாமரங்கள் ,தென்னைமரங்கள் உயிர் பெற்று பசுமையாக மாறத் துவங்கியுள்ளன.
பார்க்க விரும்புபவர்களை அன்போடு அழைக்கிறோம்.


கறார் முடிவு: வெட்டு ஒன்று துண்டு இரண்டு

படிப்பறிவு மட்டும் இன்றைய வாழ்வுக்குப் போதாது. சுழற்றி அடிக்கும் வாழ்க்கையின் பல்வேறு சூழலில் தைரியமாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் திறமை அவசியம் வேண்டும். இந்த திறன் பெறாததால் படித்தவர்கள் கூட இக்கட்டான தருணத்தில் தற்கொலைதான் முடிவு என வாழ்க்கையே முடித்து கொள்கிறார்கள்.
புத்தகங்களில் கிடைக்காத பல புதிய படிப்பினைகளை நாம் நம்மைச்சுற்றி நிகழ்வனவற்றை கூர்ந்து பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். மாமேதைகளிடம் என்பதில்லை சாதாரண மனிதர்களிடமும் சில ேரங்களில் அசாதரண முடிவுகளைக்காணலாம்.
சமீபத்தில் நமது தோட்டத்தில் ஒரு தொழிலாளியின் அனுபவத்தைக்கேட்டு அசந்து போனேன். இனி அப்படித்தான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தேவை வரும்போது முடிவு எடுக்கவேண்டும் என முடிவெடுத்தேன்.


அவர் ஒரு மரம் ஏறும் தொழிலாளி. ஒரு முறை தென்னை மரம் ஏறி தேங்காய் குலைகள் தள்ளும் போது மரத்தில் இருந்த பாம்பு இவரை கை நடுவிரலின் மத்தியில் கொத்திவிட்டது.இவர் தென்னைமரத்தில் இருந்து கீழே இறங்கி சிகிச்சை பெறுவதற்குள் விசம் தலைக்கேறிவிடும். பாப்புக்கடியின் வலியிலும் தென்னைமரத்தின் உச்சியில் மரணத்தின் போராட்டத்திலும் எந்த வித பதற்றமும் இன்றி ஒரு முடிவெடுத்தார். தன்னிடமிருந்த கத்தியாலேயே தனது விரலை பாம்பு தீண்டிய வரை வெட்டிக்கொண்டார். உயிருக்கு வந்த ஆபத்து பாதிவிரலோடு போனது. அதன் பிறகும் தன் தொழிலின் மீது எந்த வெறுப்பும் இன்றி தொடர்கிறார் என்பது தான் அதன் முத்தாய்ப்பு.
இந்த தெளிவும் தைரியமும்தானே நமக்கு வேண்டும்.